7.3 சிறுத்தொண்ட நாயனார் புராணம் |
3665
உரு நாட்டுஞ் செயல் காமன் ஒழிய விழிபொழி செந்தீ
வரும் நாட்டத் திருநுதலார் மகிழ்து அருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர் தம் களி நாட்டும் காவேரித்
திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக் குடி ஆகும். |
1 |
3666
நிலவிய அத் திருப்பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால்
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார்
பலர் புகழும் திருநாமம் பரஞ்சோதியார் என்பார். |
2 |
3667
ஆயுள் வேதக் கலையும் அலகில் வடநூல் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்று அவற்றால்
பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார். |
3 |
3668
உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி பயின்று அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு
பள்ளமடையாய் என்றும் பயின்று வரும் பண்புடையார். |
4 |
3669
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே
ஆசில் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்கு ஆகப்
பூசல் முனைக் களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர்
தேசங்கள் பல கொண்டு தேர்வேந்தன் பால் சிறந்தார். |
5 |
3670
மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
தொன் நகரம் துகள் ஆகத் துனைகெடும் கை வரை உகைத்துப்
பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்
இன்னை எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார். |
6 |
3671
கதிர் முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார்
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்தலி உடைமையினால்
எதிரி இவருக்கு இவ்வுலகில் இல்லை என எடுத்து உரைத்தார். |
7 |
3672
தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன்
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெருவுற்று
எம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான். |
8 |
3673
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமைத் தொழிற்கு அடுத்த
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு
நிறைந்த நிதிக்குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான். |
9 |
3674
உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்
எம்முடைய மனக் கருத்துக்கு இனிதாக இசைந்து உமது
மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச்
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தான். |
10 |
3675
மன்னவனை விடை கொண்டு தம்பதியில் வந்து அடைந்து
பன்னு புகழ் பரஞ் சோதியார் தாமும் பனி மதி வாழ்
சென்னியரைக் கணபதி ஈச்சரத்து இறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார். |
11 |
3676
வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத்
தீதில் குடிப் பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும்
காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார். |
12 |
3677
நறை இதழித் திரு முடியார் அடியாரை நாள் தோறும்
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டிப் பின் உண்ணும்
நிறையுடைய பெருவிருப்பில் நியதி ஆகக் கொள்ளும்
துறைவழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார். |
13 |
3678
தூய திரு அமுது கனி கன்னல் அறுசுவைக் கறிநெய்
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம்
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார்
மாயிரு ஞாலம் போற்ற வரும் இவர் பால் மனம் மகிழ்ந்தார். |
14 |
3679
சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்த
நாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால்
மே தகையார் அவர் முன்புமிகச் சிறியராய் அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல். |
15 |
3680
கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர
உண்ணிறை அன்பினில் பணி செய்து ஒழுவார் வழுவு இன்றி
எண்ணில் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெய
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண். |
16 |
3681
நீராரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப்
பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின்
வேராகி விளங்கும் திரு வெண்காட்டு நங்கைபால்
சீராளத் தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார். |
17 |
3682
அருமையினில் தனிப் புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த
பெருமையினில் கிளை களிப்பப் பெறற்கு அரிய மணிபெற்று
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்காவகை வளரத்
திருமலி நெய் ஆடல் விழாச் செங்காட்டங்குடி எடுப்ப. |
18 |
3683
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப
அங்கணர் தம் சீர் அடியார்க்கு அளவு இறந்த நிதி அளித்துத்
தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும்
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணிபுணைந்தார். |
19 |
3684
ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகமலர அளித்தவர் தாம்
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறைப் பாராட்டுச்
சீர் பெருகச் செய்ய வளர் திருமனார் சீறடியில்
தார் வளர் கிண்கிணி அசையத் தளர் நடையின் பதம் சார்ந்தார். |
20 |
3685
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணைக் காதின் மணிக் குதம்பை
மருவு திருக்கண்ட நாண் மார்பினில் ஐம்படைக் கையில்
பொருவில் வயிரச் சரிகள் பொன் அரைஞாண் புனை சதங்கை
தெருவில் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார். |
21 |
3686
வந்து வளர் மூவாண்டில் மயிர் வினை மங்கலம் செய்து
தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர்
சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்து அவரைப் பள்ளியினில் இருத்தினார். |
22 |
3687
அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்து அருள
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர்
பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலிகாவனார்தம்
நன்னமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார். |
23 |
3688
சண்பையர் தம் பெருமானும் தாங்க அரிய பெரும் காதல்
பண்புடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்து அருளத் தாம் இனிது நயப்பு உற்றார். |
24 |
3689
இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை
அத்தர் திருவடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவர் உடைய
மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம்
சித்தம் மகிழ் வயிரவராய்த் திருமலையின் நின்று அணைகின்றார். |
25 |
3690
மடல் கொண்ட மலர் இதழி நெடும்சடையை வனப்பு எய்தக்
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேகச் சுருள் போல்
தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி
படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆகப் பரப்பி. |
26 |
3691
அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை
மஞ்சின் இடைஎழுந்த வான மீன் பரப்பு என்னப்
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்பத்
துஞ்சின் உனித்து தனிப் பரப்பும் தும்பை நறுமலர் தோன்ற. |
27 |
3692
அருகு திருமுடிச் செருகும் அந்தி இளம் பிறை தன்னைப்
பெருகு சிறுமதியாக்கிப் பெயர்த்து சாத்தியது என்ன
விரிசுடர் செம்பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்த்
திருநுதல் மேல் திருநீற்றுத் தனிப் பொட்டும் திகழ்ந்து இலங்க. |
28 |
3693
வெவ்வருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும்
அவ்வனல் செம்மண்டலமும் உடன் அணைந்தது என அழகை
வவ்வும் திருக்காதின் மணிக் குழைச் சங்கு வளைத்து அதனுள்
செவ்வரத்த மலர் செறித்த திருத்தோடு புடை சிறக்க. |
29 |
3694
களம் கொள் விடம் மறைத்து அருளக் கடல் அமுத குமிழிநிரைத்
துளங்கொளி வெண் திரட் கோவைத் தூய வடம் அணிந்தது என
உளங்கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருகப் பெருக
விளங்கும் திருக் கழுத்தின் இடைவெண் பளிங்கின் வடம் திகழ. |
30 |
3695
செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப்
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என
தம்பழைய கரியுரிவை கொண்டுசமைத்தது சாத்தும்
அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க. |
31 |
3696
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்தது என
அக்குமணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும்
கைக்கு அணி கொள்வளைச்சரியும் அரைக் கடி சூத்திரச் சரியும்
தக்க திருக்கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க. |
32 |
3697
பொருவில் திருத் தொண்டர்க்குப் புவிமேல் வந்து அருள் புரியும்
பெருகருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர்
வரும் அன்பின் வழிநிற்பீர் என மறைபூண்டு அறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப. |
33 |
3698
அயன் கபாலம் தரித்த இடத்திருக்கையால் அணைத்த
வயங்கு ஒலி மூவிலைச்சூலம் மணித்திருத் தோள்மிசைப் பொலியத்
தயங்கு சுடர் வலத்திருக்கை தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட. |
34 |
3699
அருள்பொழியும் திருமுகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடிச்சூலம் வெயில் எறிப்பப்
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கிப்புவி ஏத்தத்
தெருள் பொழிவண் தமிழ்நாட்டுச் செங்காட்டம் குடிசேர்ந்தார். |
35 |
3700
தண்டாத ஒரு வேட்கைப் பசி உடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத் தொண்டர்மனை வினவிக் கடிது அணைந்து
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர்
வண்டார் பூந்தாரார் இம்மனைக்கு உள்ளாரோ என்ன. |
36 |
3701
வந்து அணைந்து வினவுவார் மாதவரேயாம் என்று
சந்தனம்மாம் தையலார் முன்வந்து தாள் வணங்கி
அந்தமில் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார்
எந்தமை ஆள் உடையீரே அகத்து எழுந்து அருளும் என. |
37 |
3702
மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த
இடவகையில் தனிபுகுதோம் என்று அருள அதுகேட்டு
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனைக்
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி. |
38 |
3703
அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு
எம் பெருமான் யாவரையும் கண்டிலர் தேடிப் போனார்
வம்பென நீர் எழுந்து அருளி வரும் திருவேடம் கண்டால்
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனித்தாழார். |
39 |
3704
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்து அருளி இரும் என்ன
ஒப்பில் மனை அறம் புரப்பீர் உத்தரா பதி உள்ளோம்
செப்பரும் சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம்
எப்பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி. |
40 |
3705
கண்ணுதலில் காட்டாதார் கணபதீச் சரத்தின் கண்
வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்தாம்
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி
அண்ணலார் திருவாத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார். |
41 |
3706
நீரார் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டும் செல்வமனை எய்தி
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும்
பாரா தரிக்கும் திருவேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார். |
42 |
3707
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார்
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண்
துடிசேர் கரத்துப் பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய்க்
கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் இருந்தார் கணபதீச் சரத்து. |
43 |
3708
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்திச்
சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்து அருள இறைவர் தம்மைத் தொழுது உரைப்பார். |
44 |
3709
பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வார் நான் என்று
கோதில் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில்
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன். |
45 |
3710
அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும் என
நெடியோன் அறியா அடியார்தாம் நிகழும் தவத்தீர் உமைக் காணும்
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மைப் பரிந்து ஊட்ட
முடியா துமக்குச் செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள. |
46 |
3711
எண்ணா அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக்
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளிச் செய்யும் கடிது அமைக்க
தண்ணார் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால் தேட
ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார். |
47 |
3712
அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார். |
48 |
3713
சால நன்று முந் நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசுத்தான் இன்னது என
ஏல அருளிச் செயப் பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்துக்
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கை தொழுதார். |
49 |
3714
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்பதஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறுவின்றேல் இன்னம்
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார். |
50 |
3715
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் என
நாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்
தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார். |
51 |
3716
அதுவும் முனைவர் மொழிந்து அருளக் கேட்ட தொண்டர் அடியேனுக்கு
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்யப் பெறில் என்று
கதுமென் விரைவில் அவர் அவர் இசையப் பெற்றுக் களிப்பால் காதலொடு
மதுமென் கமல மலர்ப் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார். |
52 |
3717
அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திரு வெண் காட்டு அம்மை
முன்பு வந்து சிறுத் தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாதமிசை இறைஞ்சிப்
பின்பு கணவர் முகம் நோக்கிப் பெருகும் தவத்தோர் செயல் வினவ. |
53 |
3718
வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர் தாம்
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய்
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப் பெறின் என்றார். |
54 |
3719
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார்
பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு
வரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும். |
55 |
3720
மனைவியார் தம் முகம் நோக்கி மற்று இத் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே? நேர் நின்று
தனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாதே
எனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை அழப்போம் யாம் என்றார். |
56 |
3721
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர்
இன்று தாழாது அமுது செய்யப் பெற்று இங்கு அவர் தம் மலர்ந்த முகம்
நன்று காண்பது என நயந்து நம்மைக் காக்க வரும் மணியை
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார். |
57 |
3722
காதல் மனையார் தாம் கூறக் கணவனாரும் காதலனை
ஏதம் அகலப் பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழிப் புதல்வன்
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்தக் கடிது அகன்றார். |
58 |
3723
பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்ப
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல்
கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர்
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி. |
59 |
3724
குஞ்சி திருத்தி முகம் துடைத்துக் கொட்டை அரை ஞாண் துகன் நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கிப்
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திருமஞ்சனம் ஆட்டி
எஞ்சல் இல்லாக் கோலம் செய்து எடுத்துக் கணவர் கைக் கொடுத்தார். |
60 |
3725
அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன்
உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாமுண்ணார்
பொச்சம் இல்லாத் திருத் தொண்டர் புனிதர் தமக்குக் கறி அமைக்க
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார். |
61 |
3726
ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை
வென்ற தாதையார் தலையைப் பிடிக்க விரைந்து மெய்த்தாயார். |
62 |
3727
இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக்
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும்
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்யத்
தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார். |
63 |
3728
பொருவில் பெருமைப் புத்திரன் மெய்த் தன்மை அளித்தான் எனப் பொலிந்து
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார்
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார். |
64 |
3729
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்துக் கூட்டிக் கடிது அமைப்பார். |
65 |
3730
மட்டு விரிபூங்குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறோர் அரும்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றும் கறி சமைத்துச்
சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்கு உரைத்தார். |
66 |
3731
உடைய நாதர் அமுது செய உரைத்த படியே அமைவதற்கு
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களி கூர
விடையில் வருவார் தொண்டர் தாம் விரைந்து சென்று மெல் மலரின்
புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார். |
67 |
3732
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு
பண்ணினேனாய்ப் பசித்து அருளத் தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்து அருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார். |
68 |
3733
இறையும் தாழாது எழுந்து அருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச
கறையும் கண்டத்தினில் மறைத்துக் கண்ணும் நுதலில் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும்
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போலக் கொண்டு மனை புகுந்தார். |
69 |
3734
வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம் மாதவரை
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனைச்
சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றித் தவிசு அடுத்த
கந்த மலர் ஆசனம் காட்டிக் கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த. |
70 |
3735
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கி
ஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து இன்பம்
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென்மலர்ச் சாந்தம்
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார். |
71 |
3736
பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூங்குஞ்சி பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின்
வனிதை யாரும் கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம்
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்க என. |
72 |
3737
பரிசு விளங்கப் பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றித்
தெரியும் வண்ணம் செஞ்சாலிச் செழும் போனகமும் கறி அமுதும்
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக் கான் மேல்
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள் செய்வார். |
73 |
3738
சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு
மன்னு சுவையில் கறி ஆக்கிமாண அமைத்தீரே? என்ன
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்காகாது எனக் கழித்தோம் என்ன
அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார். |
74 |
3739
சிந்தை கலங்கிச் சிறுத் தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயரச்
சந்தனத்தார் எனும் தாதியார்தாம் அந்தத் தலை இறைச்சி
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்துக் கொடுக்க முகம் மலர்ந்தார். |
75 |
3740
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத் தொண்டரை நோக்கி
ஈங்கு நமக்குத் தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இப்
பாங்கு நின்றார் தமைக் கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள
ஏங்கிக் கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார். |
76 |
3741
அகத்தின் புறத்துப் போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து
முகத்தில் வாட்டம் மிகப் பெருகப் பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார்
இகத்தும் பரத்தும் இனி யாரைக் காணேன் யானும் திருநீறு
சகத்தில் இடுவார் தமைக் கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச. |
77 |
3742
உம்மைப் போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று
செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை தம்மைக் கலம் திருத்தி
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டுப் படையும் எனப் படைத்தார்
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ணப் புகலும் தடுத்து அருளி. |
78 |
3743
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும் என
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார். |
79 |
3744
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர்
தாம் அங்கு அருளிச் செய்யத் தரியார் தலைவர் அமுது செய்து அருள
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவு உற்று எழுந்து அருளால்
பூ மென் குழலார் தம் மோடும் புறம் போய் அழைக்கப் புகும் போது. |
80 |
3745
வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார்
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார்
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம்
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட. |
81 |
3746
பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்த
தரமில் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்து தழுவித் தம்
கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கெடுப்பக் களி கூர்ந்தார்
புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால். |
82 |
3747
வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார்
முந்தவே அப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்து அருளச்
சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார். |
83 |
3748
செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழும் அஞ்சுகத்துப் பயிரவர் யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே எனத் தேடி
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த
தைய லோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார். |
84 |
3749
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர்
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்து அருளிப்
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார். |
85 |
3750
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய்
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள் புரிவார். |
86 |
3751
கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட குலக் கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக் கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார். |
87 |
3752
ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா
ஊறு இலாத தனிப் புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்டப்
பேறு பெற்றார் சே அடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள்
வேறு கழறிற்று அறிவார் தம் பெருமையும் தொழுது விளம்புவார். |
88 |
திருச்சிற்றம்பலம் |
7.4 கழற்றி அறிவார் நாயனார் புராணம் |
3753
மாவீற்று இருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப்
பா வீற்றிருந்த பல்புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி தான்
சேவீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக்
கோவீற்று இருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர். |
1 |
3754
காலை எழும் பல் கலையின் ஒலி களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரகச் செருக்கால் சுலவும் ஒலி
பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினதால். |
2 |
3755
மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கும் சாலை தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன
தக்க அணி கொள் மாடங்கள் தொறும் சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கள் இடங்கள் தொறும் அடங்க நிதியம் துவன்றுவன. |
3 |
3756
வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ்
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான்
கோதை அரசர் மகோதை எனக் குலவும் பெயரும் உடைத்துலகில். |
4 |
3757
முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் அதன் கண் முறை மரபின்
அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவத் திறம் தழைப்பத்
திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய்
பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக் கோதையர். |
5 |
3758
திருமா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர் மாரி
தருமா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால். |
6 |
3759
மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால்
கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணூம் கருத்தினராய்
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார்
தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார். |
7 |
3760
உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார்
புலரி எழுந்து புனல் மூழ்கிப் புனித வெண் நீற்றினும் மூழ்கி
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து
மலரும் முகையும் கொணர்ந்து மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து. |
8 |
3761
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு
வரும் அன்புடன் இன்பு உறச் சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்தே ஒழுகும் நாள். |
9 |
3762
நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ்
சீரின் மலிந்த திரு நகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும்
காரின் மலிந்த கெடை நிழல் மேல் கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த்
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான். |
10 |
3763
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின்
சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி
முந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு முயல்வார் முதற்று ஆக
இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர் பால் எய்தினார். |
11 |
3764
எய்தி அவர் தம் எதிரில் இறைஞ்சி இருந்தண் சாரல் மலை நாட்டுச்
செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது எனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண். |
12 |
3765
இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் எனப் புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால். |
13 |
3766
மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும்
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத்
தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகனமும் முதல் ஆம்
காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார். |
14 |
3767
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சிப் புறம் போந்து அரசு அளித்தல்
ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும்
மான அமைச்சர் தாள் பணிந்து அவ் விணைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார். |
15 |
3768
உரிமை நாளில் ஒரை நலன் எய்த மிக்க உபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ்
தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற் அறிவார் தாம். |
16 |
3769
தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்து
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம் கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வரக் கண்டார். |
17 |
3770
மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால்
உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே
இழையிற் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்து
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கை தொழுதார். |
18 |
3771
சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி
யார் என்று அடியேனைக் கொண்டது அடி வண்ணான் எனச்
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார். |
19 |
3772
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம்
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்றச் சினமால் களிறு ஏறி
மின்னு மணிப் பூண் கொடி மாட வீதி மூதூர் வலம் கொண்டு
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய. |
20 |
3773
யானை மிசை நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின் கண்
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக் குடை நிழற்றப்
பானல் விழியார் சாமரை முன் பணி மாறப்பன் மலர் தூவி
மான அரசர் போற்றிட வீற்று இருந்தார் மன்னர் பெருமானார். |
21 |
3774
உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர் உடன் கூட
நிலவு பெரு முக் கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி
அலகில் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து
மலரும் திரு நீற்று ஒளிவளர மறைகள் வளர மண் அளிப்பார். |
22 |
3775
நீடும் உரிமைப் பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும்
தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லைச் திருச்சிற்றம் பலத்துள்
ஆடும் கழலே எனத் தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குலப் பெருமாள். |
23 |
3776
வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம் மணித் தூபம்
தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும்
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும்
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொன் பார் சிலம்பின் ஒலி அளித்தார். |
24 |
3777
நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால்
செம் பொன் மழையாம் எனப் பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி
உம்பர் போற்றத் தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார். |
25 |
3778
இன்ன வண்ணம் இவர் ஓழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு
மன்னும் மதுரைத் திரு வால வாயில் இறைவர் வரும் அன்பால்
பன்னும் இசைப் பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள் புரிவார். |
26 |
3779
இரவு கனவில் எழுந்து அருளி என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவும் சேரன் தனக்கு உனக்குப் பைம் பொன் பட்டு ஆடை
விரவு கதிர் செய் நவ மணிப் பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றித்
தர நம் ஓலைத் தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று. |
27 |
3780
அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள் செய்த பெருமை யாலே
எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று
மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக்
கதிர் ஒளி விரிந்த தோட்டு திருமுகம் கொடுத்தார் காண. |
28 |
3781
சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு பத்திரனார்
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தித்
துங்கப் பரிசை கொடுங் கோளூர் தன்னில் புகுந்து துன்னு கொடி
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார். |
29 |
3782
கேட்ட பொழுதே கை தலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி
ஓட்டத் தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன்
பாட்டின் தலைமைப் பணனார் பாதம் பலகால் பணிகின்றார். |
30 |
3783
அடியேன் பொருளாத் திருமுகம் கொண்டு அணைந்தது என்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகம் கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறிப் பொழி கண்ணீர்
பொடியார் மார்பில் பரந்து விழப் புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார். |
31 |
3784
பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது படி எடுக்க
உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி
விரிபொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமைச் சுற்றம் எலாம்
பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள் செய்வார். |
32 |
3785
தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம்
அம்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேல் சமைய ஏற்றிக் கெணரும் என. |
33 |
3786
சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும்
சீர் கொள் நிதியும் எண்ணிறந்த எல்லாம் பொதி செய்தாளின் மேல்
பாரில் நெருங்க மிசை ஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள். |
34 |
3787
பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
நிரந்த தனங்கள் வேறு வேறு நிரைத்துக் கட்டி மற்று இவையும்
உரம் தங்கிய வெம் கரிபரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும்
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார். |
35 |
3788
பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் ஆணை
அரசும் அரசு உறுப்பும் கைக் கொண்டு அருளும் என இறைஞ்ச. |
36 |
3789
இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே
உறை மும்மதத்துக் களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர்
பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர். |
37 |
3790
பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின்
கண்கள் பொழிந்த காதல் நீர் வழியக் கையால் தொழுது அணைய
நண்பு சிறக்கும் அவர் தம்மை நகரின் புறத்து விடை கொண்டு
திண் பொன் புரிசைத் திரு மதுரை புக்கார் திருந்தும் இசைப் பாணர். |
38 |
3791
வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகிக்
கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும்
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்று இருந்தார். |
39 |
3792
அளவில் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின்
உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக்
களவு கொலைகள் முதலான கடிந்து கழற்றிற்று அறிவார் தாம்
வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள். |
40 |
3793
வானக் கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டுத்
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள்
தேன் அக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல்
மானப் பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி. |
41 |
3794
பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொரும்
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று
தேகின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார். |
42 |
3795
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கைமலர்
கூடத் தலைமேல் குவித்து அருளிக் கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து
நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறை முன்
தேடற்கு அரியாய் திருஅருள் திரு அருள் முன் செய்யது ஒழிந்தது என் என்றார். |
43 |
3796
என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் நின்று அருளாது எழும் ஒலியால்
மன்றின் இடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார். |
44 |
3797
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று
பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி
தன் நேர் இல்லா வன் தொண்டர் தமையும் காண்பான் என விரும்பி
நல் நீர் நாட்டுக் செல நயந்தார் நாமச் சேரர் கோமானார். |
45 |
3798
பொன்னார் மௌலிச் சேரலன் ஆர் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற
மின்னார் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர்
அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய். |
46 |
3799
இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக் களத்து
மட்டுவிரிபூம் கொன்றையினார் தம்மை வலம் கொண்டு இறைஞ்சிப் போய்
பட்டநுதல் வெம் களியாணை பிடர்மேல் கொண்டு பனி மதியம்
தொட்ட கொடிமாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார். |
47 |
3800
யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற
சேனைவீரர் புடைபரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த
கானம் அடைய உடன் படர்வன போலும் காட்சி மேவினதால். |
48 |
3801
புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின் அசைவில் போதுவன
அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல்
விரவிப் பரந்து சென்றனவால் மிசையும் அவலும் ஒன்றாக
நிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றனவால். |
49 |
3802
அந் நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி
மினார் மணிப்பூண் மன்னவன் ஆர் வேண்டுவாரை உடன்கொண்டு
கொனார் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டு இடைப் போவார். |
50 |
3803
சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறை அறுப்பத்
துன்று முரம்பும் கான் ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து
வென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார். |
51 |
3804
பொருவில் பொன்னித் திருநதியின் கரை வந்து எய்திப் புனித நீர்
மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித்
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற
உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார். |
52 |
3805
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச்
சந்த விரைப் பூந்திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார். |
53 |
3806
நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி
மலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து மாளிகை வலம் கொண்டு
உலகு விளக்கும் திருப் பேர் அம்பலத்தை வணங்கி உள் அணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன். |
54 |
3807
அளவில் இன்பப் பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட
உளமும் புலனும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார்
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார். |
55 |
3808
ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால்
சீரார் வண்ணப் பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப்
பாரா தரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழற்றிவார் தாம். |
56 |
3809
தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ் சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச்
செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்த ஒலிதாமும் எதிரே கேட்பித்தார். |
57 |
3810
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து
மாடத் திரு மாளிகை வீதி வணங்கிப் புறத்து வைகினார். |
58 |
3811
பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம் பொன் அம்பலத்துள்
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அந் நாளில். |
59 |
3812
ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளித் தாழ்ந்த படி தமக்குக்
கூடும் பரிசால் முன்பு அருளிச் செய்த நாவலூர்க் கோவை
நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல்
தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார். |
60 |
3813
அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சிப்
பிறவி இலாத திருவடியைப் பெருகும் உள்ளத்தினில் பெற்று
செறியும் ஞானப் போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார். |
61 |
3814
வழியில் குழியில் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச்
சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி
வழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக்
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளக் கழனி ஆரூர் கண் உற்றார். |
62 |
3815
நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி
அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா
பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்
தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார். |
63 |
3816
வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவரூர் எய்த
அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர் கொண்டு சென்று கிடந்தார் சேரலனார்
சந்தம் விரைத்தார் வன்தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார். |
64 |
3817
முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தே
அன்பு பெருகத் தழுவ விரைந்து ஆர்வத்தொடு தழுவ
இன்ப வெள்ளத்து இடை நீந்தி ஏற மாட்டாதவர் போல்
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார். |
65 |
3818
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவில் மகிழ்வு எய்த
மானச் சேரர் பெருமானார் தாமும் வன்தொண்டரும் கலந்த
பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியதால். |
66 |
3819
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து
மருவ இனியார் பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால்
பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு பரமர் தாள் பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள் புகுந்தார் சேரமான் தோழர். |
67 |
3820
சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சித் திருமாளிகை வலம் கொண்டு
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக
நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார். |
68 |
3821
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வப் பெருமாள் கழல் வணங்கி
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரைத் திருமும் மணிக் கோவை
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரல் அனார் தம்பிரானார் தாம் கொண்டார். |
69 |
3822
அங்கண் அருள் பெற்று எழுவாரைக் கொண்டு புறம் போந்து ஆரூரர்
நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும்
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர் கொண்டார். |
70 |
3823
சோதி மணி மாளிகையின் கண் சுடரும் பசும் பொன் கால் அமளி
மீது பெருமாள் தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்பக்
கோதில் குணத்துப் பரவையார் கொழுநர்க்கும் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார். |
71 |
3824
தாண்டும் புரவிச் சேரர் குலப் பெருமாள் தமக்குத் திரு அமுது
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார். |
72 |
3825
அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன்பின்
புரசைக் களிற்றுச் சேரலன் ஆர் புடை சூழ்ந்து அவரோடு அமுது செயப்
பரவைப் பிறந்த திருவனைய பரவையார் வந்து அறிவித்தார். |
73 |
3826
சேரர் பெருமான் எழுந்து அருளி அமுத செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி எனப்
பாரின் மலிசீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருத்திக்கால் இரண்டில் படியாய் ஏற்றுதலும். |
74 |
3827
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெரு உறலும்
நீண்ட தடக்கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார். |
75 |
3828
ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்தத்
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்பத் தூய விருந்தின் கடன் முடித்தார். |
76 |
3829
பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப்பூர விரைக் கலவை
வனிதை அவர்கள் சமைத்து எடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும்
புனித நறும் பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொன்கொடியார்
இனிய பஞ்ச வாசம் உடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார். |
77 |
3830
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளித்
தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுது அணிந்து
மேய விருப்பின் உடன் இருப்பக் கழறிற்றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை அடைந்தார் ஆய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார். |
78 |
3831
மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவிக்
கலை நாள் பெருகு மதி முகத்துப் பரவையார் தம் கணவனார்
சிலை நாட்டிய வெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக் கங்கை
அலை நாள் கொன்றை முடிச் சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார். |
79 |
3832
செல்வத் திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த
வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானை
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார். |
80 |
3833
இவ்வாறு ஒழுகும் நாளின் கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்
மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார். |
81 |
3834
சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்குச்
சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செலத் துணிந்தார். |
82 |
3835
இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டாரங் கொண்டு போதுவார்கள் உடன் போத. |
83 |
3836
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழத் திருவாரூர் இறைஞ்சிக்
காவில் பயிலும் புறம்பு அணையைக் கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல் வணங்கிப் போந்து வேலைக் கழிக் கானல்
பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார். |
84 |
3837
திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினை
உருக்கார்வச் செம்தமிழ் மாலை சாத்திச் சில நாள் உறைந்து போய்
பெருக்கார் உலவு சடைமுடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி
அருள் காரணர் தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர். |
85 |
3838
முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி
செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் புகலிச் சிவக் கன்றும்
அந்நேர் திறக்க அடைக்க எனப்பாடும் திருவாயிலை அணைந்து
நன்னீர் பொழியும் விழியினர் ஆய் நாயன் மாரை நினைந்து இறைஞ்சி. |
86 |
3839
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும்
அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருள் சேரர்
சிறந்த அந்தாதியில் சிறப்பித்து அனவே ஓதித் திளைத்து எழுந்தார். |
87 |
3840
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெரும் தொண்டரும் சில நாள்
செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக் கடல் நஞ்சு
அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி அவிர் மதியக்
கொழுந்து வளர் செம் கடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார். |
88 |
3841
கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்
பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார். |
89 |
3842
அங்கு வைகிப் பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார்
தங்கும் இடங்கள் வணங்கிப் போய் பாண்டி நாடுதனைச் சார்ந்து
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும்
மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்து அணைந்தார். |
90 |
3843
சேரமான் தோழரும் அச் சேரர் பிரானும் பணிப்பூண்
ஆரமார் மார்பரை ஆலவாயினில் வணங்க
வாரமா வந்து அணைய வழுதியார் மனக்காதல்
கூர மாநகர் கோடித்து எதிர் கொண்டு கொடு புக்கார். |
91 |
3844
தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார்
அன்னவர்கள் உடன் கூட அனைய அவரும் கூடி
மன்னு திரு ஆலவாய் மணிக் கோயில் வந்து அணைந்தார். |
92 |
3845
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சடையார் கோயில் வலம்
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றி இசைத்துத் தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ்
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார். |
93 |
3846
படியேறு புகழ்ச் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து
அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை
முடிவேது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார் முன் பரவிக் களி கூர்ந்தார். |
94 |
3847
செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரர் உடன்
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால்
உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும்
பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார். |
95 |
3848
உளம் மகிழக் கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன்
கிளர் ஒளிப் பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி
வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார். |
96 |
3849
அந் நாளில் மதுரை நகர் மருங்கரனார் அமர் பதிகள்
பொன்னாரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போதச்
செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்று இறைஞ்சிச்
சொன்மாலைகளும் சாத்தித் தொழத் திருப்பூவணத்தை அணைந்தார். |
97 |
3850
நீடு திருப் பூவணத்துக் அணித்தாக நேர் செல்ல
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத்
தேடு மறைக்கு அரியாரைத் திருவுடையார் என்று எடுத்துப்
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார். |
98 |
3851
சென்று திருப் பூவணத்துத் தேவர் பிரான் மகிழ் கோயில்
முன்றில் வலம் கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து
நின்று பரவிப்பாடி நேர் நீக்கி உடன் பணிந்த
வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார். |
99 |
3852
அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச் சில நாளில் ஆரூரர்
முப்பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி
மெய்ப் பரிவில் திருவால வாயுடையார் விரை மலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார். |
100 |
3853
செஞ்சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம்
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து
மஞ்சணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார். |
101 |
3854
பரமர் திருப்பரம் குன்றில் சென்று பார்த்திபர் ஓடும்
புரம் எரித்தார் கோயில் வலம் கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச்
சிரமலிமாலைச் சடையார் திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார். |
102 |
3855
கோத்திட்டை என்று எடுத்துக் கோதில் திருப்பதிக இசை
மூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே
ஏத்திய வண் தமிழ் மாலை இன் இசைப் பாடிப் பரவி
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில். |
103 |
3856
இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி
மறை முந் நூல் மணி மார்பின் வன்தொண்டர் தமைப் பணிந்தார்
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார். |
104 |
3857
அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்து அருள
மின்னாட்டும் பல் மணிப்பூண் வேந்தர் இருவரும் மீள்வார்
தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார். |
105 |
3858
இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதற் பின் எழுந்து அருளும்
பொருவருஞ் சீர் வன்தொண்டர் புகழ்ச் சேரர் உடன் புனிதர்
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலைச்சாரல்
குருமணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார். |
106 |
3859
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கிச்
சொல்தாம மலர் புனைந்து குறும் பலாத் தொழுது இப்பால்
முற்றா வெண்மதி முடியார் பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார் மன்னிய செல்வத் திருநெல் வேலியை அணைந்தார். |
107 |
3860
நெல்வேலி நீற்று அழகர் தமைப் பணிந்து பாடி நிகழ்
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார்
வில்வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றிப் பின்
செல் வேத முதல்வரமர் திரு இராமேச்சரத்து. |
108 |
3861
மன்னும் இராமேச்சரத்து மாமணியை முன் வணங்கிப்
பன்னும் தமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பு அணிந்த
சென்னியர் மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் சார்ந்த
சொல்மலர் மாலைகள் சாத்தித் தூரத்தே தொழுது அமர்ந்தார். |
109 |
3862
திரு இராமேச்சரத்துச் செழும் பவளச் சுடர்க் கொழுந்தைப்
பரிவினால் தொழுது அகன்று பரமர் பிற பணிந்து
பெருவிமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல்
மருவினார் வன்தொண்டர் மலை வேந்தருடன் கூட. |
110 |
3863
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக்
கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின்
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப்
பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார். |
111 |
3864
அங்கணரைப் பணிந்து உறையும் ஆரூரர்க்கு அவ்வூரில்
கங்குல் இடைக் கனவின் கண் காளையாந் திருவடிவால்
செங்கையினில் பொன் செண்டும் திருமுடியில் சுழியம் உடன்
எங்கும் இலாத் திருவேடம் என்புருக முன்காட்டி. |
112 |
3865
கானப் பேர் யாம் இருப்பது எனக் கழறி கங்கை எனும்
வானப் பேராறும் உலவும் மா முடியார் தாம் அகல
ஞானப் பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன்
ஏனப் பேரெயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார். |
113 |
3866
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்
புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய்
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்
தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார். |
114 |
3867
காளையார் தமைக் கண்டு தொழப் பெறுவது என் என்று
தாளை நாளும் பரவத் தருவார் பால் சார்கின்றார்
ஆளை நீள் இடைக் காண அஞ்சிய நீர் நாய் அயலே
வாளைபாய் நுழைப் பழன முனைப்பாடி வள நாடார். |
115 |
3868
மன்னு திருக்கானப் பேர் வளம் பதியில் வந்து எய்தி
சென்னி வளர்மதி அணிந்தார் செழுங் கோயில் வலம் கொண்டு
முன்னிறைஞ்சி உள்ளணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து
பன்னு செழுந்தமிழ் மாலை பாடினார் பரவினார். |
116 |
3869
ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச்
சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளிக்
காராரும் மலர்ச்சோலைக் கானப் பேர் கடந்து அணைந்தார்
போரானேற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில். |
117 |
3870
புனல் வாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு
மனம் ஆர்வம் உறச் சித்த நீ நினை என்னொடு என்றே
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்
சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார். |
118 |
3871
திருப்புன வாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும்
விருப்புடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார்
பொருப்பினொடு கானகன்று புனல் பொன்னி நாடு அணைந்து
பருப்பத வார் சிலையார் தம் பாம்பு அணிமா நகர் தன்னில். |
119 |
3872
பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும்
வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன்
சூதாரும் துணை முலையார் மணிவாய்க்குத் தோற்று இரவு
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார். |
120 |
3873
திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தர் உடன்
வருவாரைத் திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ளத்
தரும் காதலுடன் வணங்கித் தம் பெருமான் கோயிலினுள்
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெறப் புகுந்தார். |
121 |
3874
வாச மலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலம் கொண்டு
நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால்
பாச வினைத் தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார். |
122 |
3875
பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த
விரவு பேர் அலங்கார விழுச் செல்வம் மிகப் பெருக
வரவு எதிர் கொண்டு அடிவணங்க வன் தொண்டர் மலைநாட்டுப்
புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார். |
123 |
3876
பரவியே பரவையார் பரிவு உடனே பணிந்து ஏத்தி
விரவிய போனகங்கறிகள் விதம் பலவாகச் சமைத்துப்
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்துத்
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார். |
124 |
3877
மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து
தங்கி இனிது அமர் கின்றார் தம்பிரான் கோயிலினுள்
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார். |
125 |
3878
நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி
விலக்கரும் போர்த் தகர்ப் பாய்ச் சல் கண்டு அருளி வென்றி பெற
மலைக்கு நெடு முள் கணைக்கால் வாரணப் போர் மகிழ்ந்து அருளி
அலைக்கும் அறப் பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார். |
126 |
3879
விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்லக்
கரவில் ஈகைக் கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டுப்
பரவையார் தம் கொழுநனார் தம்மைப் பணிந்து கொண்டு அணை
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்து அருள. |
127 |
3880
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்து அருளத்
திங்கள் முடியார் திரு அருளைப் பரவிச் சேரமான் பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளிப்
பொங்கும் முயற்சி இருவரும் போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில். |
128 |
3881
தம்பிரானைத் தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய
நம்பி ஆருரரும் சேரர் நன்னாட்டு அரசனார் ஆய
பைம் பொன் மணி நீள் முடிக் கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன்
செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல் பால் செல்கின்றார். |
129 |
3882
பொன் பரப்பி மணிவரன்றி புனல் பரக்கும் காவேரித்
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர்
அன்புருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள். |
130 |
3883
வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள்
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் குவித்து அருளிக்
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித்
தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார். |
131 |
3884
ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள ஆரூர் தமை நோக்கி
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி
நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன. |
132 |
3885
ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல்
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப
நீறு விளங்கும் திருமேனி நிறுத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார் தரியாது அழைத்துப் பாடுவார். |
133 |
3886
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும். |
134 |
3887
மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என
நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட. |
135 |
3888
விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்லவழிப்
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார். |
136 |
3889
நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார். |
137 |
3890
செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான்
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில்
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார். |
138 |
3891
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றித் திளைத்து இறைஞ்சித்
தங்கள் பெருமான் திரு அருளால் தாழ்ந்து மீண்டும் தடம்பொன்னித்
பொங்கு நதியின் முன் வந்த படியே நடுவு போந்து ஏறத்
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடரப் பெருகியதால். |
139 |
3892
ஆய செயலின் அதிசயத்தைக் கண்ட கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பால் போய்த்
தூய மதிவாழ் சடையார் தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்திச்
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரர் உடன். |
140 |
3893
கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட்டு எல்லையுற
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர்
அங்கண் உடனே அணை எழுந்து அருளா நின்றார் எனும் விருப்பால்
எங்கும் அந் நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர். |
141 |
3894
பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன
வீதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ. |
142 |
3895
திசைகள் தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம்
மிசை கொள் பண்ணும் பிடிவெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு
அசைவில் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து கொடுங் கோளூர் அணைந்தார். |
143 |
3896
கொடுங்கோ ளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து
தொடுங்கோபுரங்கள் மாளிகைகள் குளிர் குளிர் சாலைகள் தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணித் தாமம் கமுக
விடுங்கோதைப் பூந் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து. |
144 |
3897
நகர மாந்தர் எதிர் கொள்ள நண்ணி எண்ணில் அரங்கு தொறும்
மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார்
சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக் களத்து
நிகரில் தொண்டர் தமைக் கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார். |
145 |
3898
இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு
நிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப்
பிறை கொள் முடியார் தமைப்பாடி பரவிப் பெருமாளுடன் தொழுதார். |
146 |
3899
தொழுது தினைத்துப் புறம் போந்து தோன்றப் பண்ணும் பிடிமேற்பார்
முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றிப் பின்பு தாம் ஏறிப்
பழுதில் மணிச் சாமரை வீசிப் பைம்பொன் மணி மாளிகையில் வரும்
பொழுது மறுகில் இருபுடையும் மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார். |
147 |
3900
நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார்
எல்லை இல்லாத் தவம் முன்பு என் செய்தோம் இவரைத் தொழ என்பார்
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார்
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலைப் பாரீர் எனத் தொழுவார். |
148 |
3901
பூவும் பொரியும் பொன் துகளும் பணிவார் பொருவில் இவர்
மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் என வியப்பார்
பாவும் துதிகள் எம் மருங்கும் பயில வந்து மாளிகையின்
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார். |
149 |
3902
கழறிற்றறியுந் திருவடியும் கலை நாவலர் தம் பெருமானாம்
முழவில் பொலியும் திரு நெடுந்தோள் முனைவர் தம்மை உடன் கொண்டு
விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தித் தாமும் நேர் நின்று. |
150 |
3903
செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த
அம்பொன் பாதம் தாம் விளக்கி அருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருளத் தரணியில் வீழ்ந்து
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என. |
151 |
3904
பெருமாள் வேண்ட எதிர் மறுக்க மாட்டார் அன்பில் பெரும் தகையார்
திருமா நெடுந்தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார்
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன்பின்
ஒருமா மதிவெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார். |
152 |
3905
சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி
ஆரம் நறுமென் கலவை மான் மதச் சாந்து ஆடை அணிமணிப் பூண்
ஈர விரை மென்மலர்ப் பணிகள் இனைய முதலாயின வருக்கம்
சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிகத் தமக்கு ஆக்கி. |
153 |
3906
பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம் தொறும் நிகழ
மாடு விரைப்பூந்தருமணஞ்செய் ஆராமங்கள் வைகுவித்துக்
கூட முனைப் பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார். |
154 |
3907
செண்டாடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்றுப் பெரும் சிறப்பும்
வண்டாடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும்
தண்டாமும் மத கும்பத் தட மலைப்போர் சல மற்போர்
கண்டாரா விருப்பு எய்தக் காவலனார் காதல் செய்நாள். |
155 |
3908
நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்
ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார். |
156 |
3909
திருவாரூர் தனை நினைந்து சென்று தொழுவேன் என்று
மரு ஆர்வத் தொண்டர் உடன் வழி கொண்டு செல்பொழுதில்
ஒருவா நண் புள்ளுருக உடன் எழுந்து கை தொழுது
பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார். |
157 |
3910
வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய்
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன
ஒன்றுநீர் வருந்தாதே உமது பதியின் கண் இருந்து
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார். |
158 |
3911
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர்
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர்
தேரூரும் நெடும் வீதித் திருவாரூர்க்கு எழுந்து அருள
நேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார். |
159 |
3912
மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர் மொழிவார்
என்னுயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச. |
160 |
3913
மற்றவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள் தமை அழைத்து
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும் பண்டார நானா வருக்கம் ஆன வெலாம்
பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவரப் பண்ணும் என. |
161 |
3914
ஆங்கவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள்
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணிப்பூண் துகில் வருக்கம்
ஞாங்கர் நிறை விரையுறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்பத்
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலியக் கொண்டு அணைந்தார். |
162 |
3915
மற்றவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவு இட்டு முனைப்பாடித் திருநாடார்
பொற் பதங்கள் பணிந்து அவரைத் தொழுது எடுத்துப் புணை அலங்கல்
வெற்புயர் தோள் உறத் தழுவி விடை அளித்தார் வன்தொண்டர். |
163 |
3916
ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று
காரூரும் மலைநாடு கடந்து அருளிக் கல் சுரமும்
நீரூரும் கான் யாரும் நெடும் கானும் பலகழிய
சீரூரும் திருமுருன் பூண்டி வழிச்செல்கின்றார். |
164 |
3917
திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின் கண்
பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பதலால்
ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்
பெருகருளால் தாம் கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம். |
165 |
3918
வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்று
வன்தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவப் படையாய்ச்
சென்று அவர் தாம் வரும் வழியில் இருபாலும் செயிர்த்து எழுந்து. |
166 |
3919
வில் வாங்கி அலகம்பு விசை நாணில் சந்தித்துக்
கொல்வோம் இங்கு இட்டுப்போம் எனக் கோபத்தால் குத்தி
எல்லையில் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார். |
167 |
3920
ஆரூரர் தம்பால் அவ்வேடுவர் சென்று அணையாதே
நீரூருஞ் செஞ்சடையார் அருளினால் நீங்க அவர்
சேரூராம் திருமுருகன் பூண்டியினில் சென்று எய்திப்
போரூரு மழவிடையார் கோயிலை நாடிப் புக்கார். |
168 |
3921
அங்கணர் தம் கோயிலினை அஞ்சலி கூப்பித் தொழுது
மங்குலுற நீண்ட திருவாயிலினை வந்து இறைஞ்சிப்
பொங்கு விருப்புடன் புக்கு வலம் கொண்டு புனித நதி
திங்கள் முடிக்கு அணிந்தவர் தம் திருமுன்பு சென்று அணைந்தார். |
169 |
3922
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம்
மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார்
வெருவுறவேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம். |
170 |
3923
பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால்
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண்ணெருங்க
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக் கொண்டார். |
171 |
3924
கைக்கொண்டு கொடுபோம் அக் கைவினைஞர் தமை ஏவி
மைக் கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க் கொங்கு அன்று
மெய்க் கொண்ட காலினால் விரைந்து ஏகி மென் கரும்பும்
செய்க் கொண்ட சாலியுஞ்சூழ் திருவாரூர் சென்று அணைந்தார். |
172 |
3925
நாவலர் மன்னவர் அருளால் விடை கொண்ட நரபதியார்
ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர் தமை நினைந்து
மாவலரும் சோலை மா கோதையினில் மன்னிமலைப்
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார். |
173 |
3926
இந் நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன்தொண்டர்
பொன்னி வளநாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து
மன்னு திருக் கயிலை யினில் மத வரைமேல் எழுந்து அருள
முன்னர் வயப்பரி உகைக்கும் திருத்தொழில் பின்மொழிகின்றாம். |
174 |
3927
மலை மலிந்த திருநாட்டு மன்னவனார் மா கடல் போல்
சிலை மலிந்த கொடித் தானைச் சேரலனார் கழல் போற்றி
நிலை மலிந்த மணிமாடம் நீள் மறுகு நான் மறை சூழ்
கலை மலிந்த புகழ்க் காழிக் கணநாதர் திறம் உரைப்பாம். |
175 |
திருச்சிற்றம்பலம் |